Friday, 27 March 2009

இனி இப்படியும் சொல்லாதீர்கள்... ப்ளீஸ்.

நண்பரின் வீட்டிற்கோ அல்லது உறவினரின் வீட்டிற்கோ காதுகுத்து, திருமணம் (இதுவும் ஒரு வகை காதுகுத்து தானோ?), போன்ற சிறப்பு தினங்களில் நீங்கள் செல்லும் பொழுது, அங்கே இரண்டு வாலிபர்களோ அல்லது வாலிபிகளோ ஓடியாடி வேலை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

வீட்டில் உள்ள யாருக்கோ நண்பர்களாய் இருப்பார்கள் ஓடியாடி வேலை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருப்பார்கள். நீங்கள் போனதும் அவர்கள் உங்கள் கவனத்தை ஈர்க்க பாவனை செய்வதை இன்னும் அதிகப்படுத்தி, பல பேரை மேற்பார்வை செய்வது போலே ஆட்டத்தையும் அதிகப்படுத்துவார்கள். நண்பரிடமிருந்தோ,உறவினரிடமிருந்தோ விடைபெறும் பொழுது உங்களின் அரிய அவதனிப்பை அங்கே நீங்கள் வெளிப்படித்தி இருக்கக் கூடும்..

" அந்த ப்ளூ கலர் டிரஸ் ஸ்மார்ட்டா இருக்கான்/ செம பிகரு" என்று சொல்லி அந்த மீசைவைத்த/தாவணி போட்ட, மன்னிச்சிகோங்க.... சுடிதார் போட்ட 'குழந்தை'யின் மனத்தை கிளறி விட்டு வந்திருப்பீர்கள்.

யோசித்துப்பாருங்கள். அந்த சின்னஞ்சிறு வயதில், அதுவரை தனக்கு மட்டுமே "எதுவுமே செட் ஆகவில்லை" என்று நொந்து இருக்கும் வேளையிலே கிடைத்த இந்த முக்கியத்துவம்,கவனிப்பு,செண்ட்டர் ஆஃப் அட்ராக்ஸன் அவர்களை ஏதேதோ செய்திருக்க, வேறு ஒரு சந்தர்பத்தில், நீங்கள் வேறு ஒரு நபரை இதே மாதிரி கமன்ட்ட.... அதுவரை தன் மனதில் இருந்த நம்பிக்கை, பெருமை, கர்வம், 100 சதவீதத்தில் இருந்து 50க்கோ 30க்கோ அல்லது பூஜ்ஜியத்திற்கோ வடிந்து போனதின் தாக்கத்தை தன்னுள்ளே வைத்து, அதற்கு பெயரிடத்தெரியாமல் தவிக்கும் ஜீவன் எத்தனை? எத்தனை??

வளர,வளர இந்த ஆழ்மன வலி "குத்துங்க, எசமான் குத்துங்க... இந்த பொம்பளைங்களே இப்படிதான்" போன்ற வசனத்தை ஆண்களும், " இந்த ஆண்கள் எல்லாரும் மோசம், மலர் விட்டு மலர் தாவும் வண்டு, ஜொள்ளு பார்டிங்க" போன்ற வசனத்தை பெண்களும் ஆத்மார்த்தமா ரசிக்க செய்து, நீ பெரிய பையன்/பொண்ணுல்ல என்று ஏமாற்றத்தை, "உலகத்தை புரிஞ்சி, பக்குவபடுதல்" என்ற ஒரே காரணத்தைச் சொல்லிச் சொல்லி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில் வளரப் போகும் பிஞ்சு எத்தனை? எத்தனை??

வேலை பாரத்தை தோள்களில் ஏற்பதில் துவங்கி, குடும்ப கஷ்டங்களை பகிர்ந்து, நண்பனின் வீட்டில் வேலை செய்ய வந்தால், அந்த குடும்பத்து உறுப்பினர்களின் நட்பு பாசம் அனுபவித்த ஒரே காரணத்திற்காக வேலை செய்ய வந்தவர்க்கு தரப்படும் வரமோ சாபமோ.

இவை எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை, இப்படி அக்கினி முன்னிலையில் "டாவை" ஆரம்பிச்சி, பல போராட்டங்களுக்கு பின்னே அக்கினி சாட்சியாகவோ, இல்லை அண்பர் ஆறுமுகத்தின் சாட்சியாகவோ கைபிடித்த பின்பும் அந்த அக்கினி தீ அவன்/அவள் வாழ்நாள் முழுதும் எறிந்து கொண்டுதான் இருக்கும் அவசரப்பட்டுடேனோ? என்ற கேள்வியாய் மனதில்.

எனவே, " அந்த ப்ளூ கலர் டிரஸ் ஸ்மார்ட்டா இருக்கான்/ செம பிகரு" என்ற வார்த்தையை தவிர்த்துவிடுங்கள்.
அமைதியாய் அழகை ஆராதியுங்கள்.
ப்ளீஸ்...


.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இது அண்ணன் நர்சிம் அவர்களின் பதிவிற்கு எதிர் பதிவு அல்ல. அதனை ஒட்டி வந்த பதிவு. அண்ணே இந்த வார்த்தையையும் உங்க லிஸ்ட்லே சேர்த்துகோங்க.

நீங்க இந்த மாதிரி நொந்த ஆளா இருந்தா உங்க வேதனைய பதிவு செய்யுங்க. இல்லை மனதில் கேள்வியுடன் வாழ்பவரா இருந்தா அதையும் சொல்லிட்டு போங்க, இல்லை இப்படி எதுவும் இல்லை என்றாலும் அதையும் சொல்லிட்டு போங்க, பின்னூட்டத்திலே.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Thursday, 26 March 2009

ம.தி.மு.க. சீட்டு பங்கீடு வைகோ புது முடிவு?


நன்றி: டாஸ்மாக் கபாலி (புகைப் படத்திற்காக)

வைகோவை பார்த்துட்டு நீங்களே இப்படி கமெண்டு போடாமே போகலாம்னு நினைக்கிறீங்களே. அப்படின்னா அவங்க கட்சியையே விட்டு போறதுலே என்ன தப்பு?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வந்த மகராசன்களே..... வைகோவிற்கு ஓட்டு தான் போட மாட்டீங்க, அவரை வச்சு போட்ட பதிவுக்கு பின்னூட்டமாவது போட்டுட்டு போங்க
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Wednesday, 25 March 2009

"கேபிள்" அண்ணனுக்கு ஒரு பகிரங்க பாடல்.

,பலபேரு பல பேருக்கு பகிரங்க மடல், எழுதுறாங்க அதனாலே நான் ஒரு சேஞ்சுக்கு பகிரங்க பாடல் எழுதலாம்னு முயற்சி செஞ்சேன். சொந்தமா எழுத நமக்கு எங்கு நேரம்? ( மூளைன்னு எழுதற இடத்துலே எப்படி நேரம்னு போட்டு சமாளிச்சேன் பார்த்தீங்களா? இது தான் நேரங்குறது.)

அண்ணன் கேபிள் அவர்களுக்கு இந்த பாடல்களை சமர்பிக்கிறேன்...

இது ஒரு புகழ் பெற்ற பாடல்.

அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே...
அதை சொன்னா............ வெட்ககேடு
அதை சொல்லாட்டி....... மானகேடு


உங்க உங்க இஷ்டம் போலே
பல "widget" சேர்துட்டீங்க.
ஒன்னரை செகண்டில் லோ......டாறதை
முக்கா மணி ஆக்கிபுட்டீங்க.


அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே
அதை சொன்னா ............ வெட்ககேடு
அதை சொல்லாட்டி ....... மானகேடு

பதிவு பக்க மூலையிலே சோடி ஒன்னு சேர்ந்திருச்சு..

அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே


இதன் முழு வடிவம் தெரியாததால் பாதியிலேயே நிற்கிறது. அண்ணன் கேபிள் மீது ஆழ்ந்த அன்பு (காண்டு?!?! ) உள்ளவர்கள் முழுப்பாடலையும் கொடுத்து உதவினீர்கள் என்றால் நல்லா இருக்கும்.
அடுத்து அண்ணன் கேபிளை பாராட்டி ஒரு பாடல் ( சத்தியமா. பாராட்டிதாங்க...)

பதிவுக்கு பெயர்தான் கேபிள்
அந்த பதிவினில் எங்கே கேபிள்
உன் பிரிவினில் தேடுதே கேபிள்
உன் உறவிற்கு தானே கேபிள்


நீ போட்ட பதிவை நான் படித்து கண்டேன் கேபிள்.
நீ காட்டும் அன்பால் நான் நீக்கி கொண்டேன் கேபிள்.
நீ சொன்ன மொக்கை படம் பார்த்து துடித்தேன் கேபிள்.
நீ வந்த பின்னே நான் இழந்து நின்றேன் கேபிள்.


எல்லோரும் வாழ்வில் தேடிடும் கனெக்சன் கேபிள்.
மக்கள் உயிரோடு கலந்து வாழ்ந்திடும் கனெக்சன் கேபிள்.
எது வந்த போதும் மறவாத கனெக்சன் கேபிள்.
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே கேபிள்

வில்லு படம் பார்த்த சிலகாலம் போதும் கேபிள்
மண்ணோடு மறையும் நாள்வரை பாறேன் கேபிள்
கோலிவுட்டு வடிக்கும் நீர் என்று மாறும் கேபிள்
பொன் ஏடு எழுதும் உன் படம் வாழ்த்தும் கேபிள்.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெருந்தன்மையுடன் அனுமதி தந்த அண்ணன் திரு.கேபிள்சங்கர் அவர்களுக்கு நன்றி.

உள்ளத்தை அள்ளித் தா படத்திலே கவுண்டமணி சொன்ன மாதிரி நான் இங்கே என்னிட்டே இல்லாத மூளையெல்லாம் தேடி செலவழிச்சு எழுதி இருக்கேன். பணம் தான் தரமாட்டீங்க அட்லீஸ்ட் பின்னூட்டமாவது போட்டுட்டு போங்க கண்ணுங்களா.....
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Thursday, 12 March 2009

பதினாறு வயது பையனாக இருப்பதனால், வரும் பதினோரு சங்கடங்கள்!

1) நிச்சயமாக பதில் கடிதம் வரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, பதில் கடிதம் வரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் காதல் கடிதம் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) காதல் கடிதம் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்த பெண்ணின், குடும்பத்தை சார்ந்த 'டெரர்' செய்திகள் ஏதாவது குறிப்பாகவோ, தகவலாகவோ அறிய நேர்கிறது.

3) "எந்த பிகரையும் இரண்டொரு நாளில் மடித்து விடுவேன். பாருங்க. மடிச்சுட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல அல்வாவும் குடுத்துடுவேன்" – இது பதின்ம வயதில் இருக்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, பதின்ம வயதில் பிகருக்கு ஏங்கி இருப்பவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4) லெட்டர் கொடுத்து பல்பு வாங்கியவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர், "லெட்டர் கொடுத்த வீரன்" மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘அந்த சுஜாதா பொண்ணுகிட்டே பல்பு வாங்கியவர்' என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘பிகர் செட்டாகாத, டொக்கு பய' என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் லவ் லெட்டர் கொடுத்த பெண்ணிடம், இன்னொருவர் லவ் லெட்டர் கொடுக்கும் போது "நமக்கு பின்னாடியும் ரெண்டு பேரா?" என்ற சந்தோச குழப்பத்திற்கு அந்த அட்டு பிகரை ஆளாக்குகிறோம். அல்லது அவள் அந்த லெட்டரையும் வாங்கி கொண்டால் 'இரண்டு பேருக்கு பல்பு கொடுத்த' பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) வாங்கிய லவ் லெட்டரை தூர எறிவது, கிழித்து எறிவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல், "பிடிக்க வில்லை என்றால், என்னிடம் கொடுங்கள் இல்லை என்றால் உங்க தங்கையிடமோ, தோழியிடமோ கொடுத்து பதில் வாங்கி தாருங்கள்" என்று வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் தூர எறிவது, கிழித்து எறிவது போன்றவற்றை செய்தால், ‘இந்த அட்டு பிகருக்கு இருக்கிற நெனைப்பா பார்ரா' என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7) நம்மீது காதல் கொண்டு, பதில் தந்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து, "அடச்சே... இவளை விட சூப்பர் பிகருகிட்டே கொடுத்திருக்கலாமோ" என்று நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ள நேர்கிறது. உண்மையாகவே பிடிக்காமல், கிழித்தெறிந்து விட்டால் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) லெட்டர் கொடுத்து திரும்ப பதில் வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் லெட்டர் கொடுக்க, எழுத ஐடியா கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் மறுக்க, அட்வைசு கொடுக்க அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பன் மூலமா லெட்டர் கொடுத்தால் அந்த நண்பன், அந்தப் பெண், நட்பு, காதல், அதற்காக நாம் செலவிட்ட பணம், ஐயிந்தையும் நாம் இழக்க நேர்கிறது.

10) உண்மையாக காதலித்தால் உடனே எதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து செட்டப் செய்திருந்தால், அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாக... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நல்ல காதல் என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல காதலை கல்யாணத்தில் முடிப்பதால் அந்த நல்ல பெண் மூலமாக நம் பெற்றோருக்கு கிடைக்கும் "ராயல்டிக்கு" நாம் தடையாக இருக்கிறோம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
படிச்சிட்டீங்க.....! அப்படியே நீங்களாவது ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போவீங்க, அந்த பொண்ணு மாதிரி ஏமாத்தாமே என்று எண்ணுகிறேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Tuesday, 10 March 2009

மருத்துவர் புருனோ பதில் தருவார் என்று நம்பி, ஒரு கேள்வி.

இங்கு மும்பையில், எனது நண்பருடன் சேர்ந்து அவரது மனைவிக்கு மருந்து வாங்க சென்றோம். Duphaston என்று அதற்கு பெயர்.(அதன் பயன்பாடு மற்றும் செயல்பாடும் பற்றி இங்கே நான் எழுதுவேன், ஆனால் அதை படித்துவிட்டு சிலர் மருத்துவர் ஆலோசனை இன்றி அதனை தனக்கு தெரிந்தவர்களுக்கு சிபாரிசு செய்யும் கொடுமை நடந்துவிடும், அதனால் விட்டு விடுகிறேன். ) அந்த மருந்தை மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் நண்பரும் மூன்று மாதங்கள் வாங்கினார். இறுதி சுழற்சி அல்லது இறுதி கட்டத்தில் அவருக்கு நான்கு, ஐந்து மாத்திரைகளே போதுமானதாக இருந்தது. ஆனால் கடையில் "நாங்கள் ஒரு அட்டையாக மட்டுமே தருவோம். நான்கு ஐயிந்தாக தர மாட்டோம்" என்று கூறினார். நண்பரும் வேறு வழியின்றி ஒரு அட்டை வாங்கி சென்றார்.

பிறிதொரு நாளில் வேறு நண்பருடன், மருந்து வாங்க சென்றேன் மருந்தின் பெயர் Mox 500. இப்போது அந்த மருந்து கடையில் நண்பரே ஒரு அட்டை மாத்திரை வாங்கி வந்தார். நீங்கள் ஏன் ஒரு அட்டை மாத்திரை வாங்கி வந்தீர்கள். இரண்டு அல்லது மூன்று போதுமே என்றேன். அதற்கு அந்த நண்பர் இந்த மாத்திரை ஒன்று இரண்டெல்லாம் தர மாட்டார்கள். அட்டை தான் வாங்க வேண்டும் என்று கூறினார்.

இரண்டுமே விலை உயர்ந்த மருந்துகள் தான்.

இப்போது என்னுடைய கேள்விகள். இது தெளிதல் மற்றும் அறிதல் நோக்கில் வைக்கபடும் கேள்விகள்.

1. இப்படி இந்த மாத்திரைகளை, மருந்துகளை முழுவதுமாக தான் விற்க வேண்டும் என்று அந்த கடைக்காரர் சொல்கிறாரே. இது சரியா? தவறா?

2. இது சரி என்றால் அந்த உத்தரவை வழங்கிய துறை எது? தவறு என்றால் இதை எங்கே முறையிட வேண்டும்?

3. இந்த மாதிரி நிர்பந்திக்கும் போது, பொருளாதாரா ரீதியாக ஓரளவு வசதியாக இருப்பவர்கள் வாங்கி விடுவார்கள். நடுத்தர மக்களுக்கு தேவை இல்லாத சுமையாகவும், ஏழைகள் வாங்க முடியாதும் போகிறதே? அப்படியே வாங்கி விட்டாலும், அதனை பாதுகாக்கும் வழிகளும், உபகரணங்களும் இல்லது போகும் போது எப்படி காப்பது?

இதில் தங்கள் பெயர் குறிப்பிட்டு விளித்தது, நண்பர் என்கிற முறையில் தான். இதில் தங்களுக்கு வருத்தம் வந்தால், மன்னித்து. நானும் இந்த வலை உலகும் அறியும் பொருட்டு விடை தாருங்கள். என்று தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மருத்துவர் புருனோ மட்டுமன்றி, இதைப்பற்றி அறிந்தவர் யாரும் பதில் அளிக்கலாம். மற்றவரும் தங்கள் அனுபவங்களை தரலாம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Monday, 9 March 2009

தமிழக அரசியலில் மாற்றம் வருமா?

வோட்டு சந்தை கூடும் நாள் அறிவிக்கப்பட்டு விட்டது. பெரும் முதலாளிகள் முதல் சில்லறை முதலாளிகள் வரை தங்கள் டேரா மற்றும் பதாகைகளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார்கள். சில பல கவர்ச்சி சலுகை, கவர்ச்சி திட்டம் மற்றும் கவர்ச்சி நடிகைகள், நடிகர்கள் என்று கிளம்பிவிட்டார்கள்.

சரி.. ஆட்டம் துவங்கியாச்சு. நம் பதிவர்கள் முதல் சலூன் கடையில் கிடந்தது தந்தி யை புரட்டும் முதியவர்கள் வரை ஆட்டத்தில் பங்கு பெரும் முதலாளிகளையும் அவர்களின் அல்லக்கைகளையும் ஒரு வழி பண்ணும் அளவிற்கு கருத்துகளும் வழங்கியாச்சு. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று மாறாமல் கூவியாச்சு.

பெட்டி தூக்கி, வேட்டி கட்டி கிளம்பியிருக்கும் இந்த முதலாளிகளின் இலக்கு நீங்களா? உங்கள் ஒட்டா? இல்லை... இல்லை... இல்லவே இல்லை, என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

கூகுளாண்டவரை தொழும் நீங்களும் நானும் அல்ல அவர்கள் இலக்கு, கூழையே ஆண்டவனாக கொண்ட அப்பாவிகள் தான் அவர்கள் இலக்கு.

வாழ்கை சக்கரத்தில் 'யு-ட்யூபை' இணைத்து கொண்ட நீங்களோ அவர்களின் வலையில் சிக்க போகிறீர்கள்? வழுக்கை சைக்கில் சக்கரத்தில் உள்ள வால்-ட்யூபை மாற்ற வக்கில்லாத வறியவர்கள் அல்லவோ அவர்கள் வலையில் சிக்க போகிறார்கள்!

வாயிலே பராக் ஒபாமாவை மெல்லும், அறிவாளியாக காட்டி கொள்ளும் சிறிய கூட்டம் அல்ல அவர்களது குறி, வாயிலே வெற்றிலை பாக்கை, பாண் பராக்கை மெல்லும் வறிய கூட்டமே அவர்கள் குறி.

இன்னும் எம்ஜீயாரும், என்டீயாரும் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பும் பாமர கூட்டத்தை நம்பிதானே இவர்கள் கடை விரிக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையை உரைக்காமல் நாம் என்ன சாதிக்க முடியும்.? அவர்களுக்கு அவர்கள் நிலைமையை உணர்த்தாமல் நாம் என்ன பெற்றிட முடியும்? என்ன மாற்றத்தை நாம் ஏற்படுத்தி விட முடியும்? அதனால் தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி கொடுத்தாரே மாபெரும் தலைவர் அம்பேத்கர்.அந்த அம்பேத்கரும் வெறுமனே புரட்சி செய் என்று சொல்லவில்லை, கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று கூறினார். இன்றைய நமது சூழலில் புரட்சியெல்லாம் கூட தேவை இல்லை, கற்பித்தாலே போதும், சமூக மாற்றம் தானே நடக்கும்.

நீங்கள் யாருக்கு ஒட்டு போடுவீர்கள்? என்று கேட்டால் "நான் ஜெயலலிதாவிற்கெல்லாம் ஒட்டு போட மாட்டேன், ரெட்டை இல்லை எம்ஜியாருக்கு தான் ஒட்டு போடுவேன்" என்று பெருமையாக சொல்லும் குடி மக்களை வைத்து தானே, இங்கே இப்போ நாம் ஜனநாயகத்தை வளர்த்து கொண்டுள்ளோம்.

என் நாடு, என் சமூகம், அனைத்து மக்களும் அமைதியுடனும், பொருளாதார தன்னிறைவோடும் வாழ வேண்டும் என்று நினைக்கிறன். அனைவரும் அறிதல், அதுவும் உண்மை நிலை அறிதல் என்ற சமூக மாற்றம் இல்லாது வெறும் அரசியல் மாற்றம் மட்டும் நம்மை, நம் சமூகத்தை, நம் நிலையை முன்னேற்றாது என்பது என் நம்பிக்கை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒட்டு போடுங்கன்னு உங்ககிட்டே கேட்டாலே... எவ்வளவு தருவே என்று என்கிட்டேயே கேப்பீங்க...
அதனாலே பின்னூட்டம் மட்டுமாவது போட்டுட்டு போங்க... ஹி ஹி ஹி

Tuesday, 3 March 2009

மும்பையிலும் தமிழர் எழுச்சி.

உழைப்பின் உன்னதம் அறிந்தவன் தமிழன். உழைப்பின் உயர்வை அறிந்தவன் தமிழன். விண்ணை கடைந்து எடுக்க கலன் அனுப்பியவன் தமிழன், மண்ணை கடைந்து உழுது உண்ணும் கலன் நிரப்பியவன் தமிழன். அவன் காணா களமும் இல்லை அவன் இல்லாத காலமும் இல்லை.

உயிரை எடுக்கும் தொழில் செய்பவனை எமதர்மராஜா என்று போற்றி பிறர் மதித்து தொழும் வேளையிலும் அவனை காலன் என்று காலால் எத்தி மிதித்தவன் தமிழன். எவனுக்கும் அஞ்சி சேவகம் செய்யாதவன். அந்நியர்கள் ஒவ்வொரு பாளையமாக கைப்பற்றி வரி வசூல் வேட்டை நடத்திய வேளையிலே ' நெற் கட்டும்' செவலை. 'நெற்கட்டான்' சேவல் என்று மாற்றி வீரப்போர் நடத்தி, விடுதலை போரின் முதல் 'நாற்றை' நட்டவன் நம் தமிழன். "எமக்கு என்ன சேவகம் செய்திட்டாயடா பரங்கிப்பேயே? எம்மிடம் வரி வசூலிக்க வந்திட்டாய்?" என்று போர் முழக்கம் செய்தவனும், விடுதலை நாற்றை வீறுடன் எழ செய்தவனும் தமிழனே ஆக முதலில் வீர வாளையும், வேலையும் ஆயுதமாக ஏந்தியவன் தமிழன். பின்னே தானே சிப்பாய் என்று பெயர்பெற்றவரும் கலகம் செய்திட்டார். அந்நியன் கலக்கம் அடைந்திட்டான்.

மேலை நாட்டினர், நம் உரிமை பொருளின் மீதும் உரிமை நாட்டினர். அடங்கியவனோ தமிழன்? அவனுக்கு எதிராய் வியாபார ஆயுதம் ஏந்தி கப்பல் தொழில் செய்து, கடல் பரப்பின் மீதும் நம் உரிமையை நாட்டினர் தமிழர்.

அயல் நாடுகளின் உதவியுடன் இராணுவமும் நடத்தி வந்தவன் தமிழன். தமிழன் என்றால் சும்மா இல்லை "எம்டன் அவன்" என்று உணர்த்தியவன் ஒரு மறத்தமிழன். தமிழனின் பெருமை கூற ஆரம்பித்தால் அது முற்று பெறாது போய் கொண்டே இருக்கும். மேலும் இன்றைய சூழ்நிலையில், பழம்பெருமை பேசி வீணே பொழுதை களித்து, கழித்து கிடப்பதல்ல நமது பெருமை.

உலகெங்கும், தமிழ் மக்களுக்கு ஆதரவாய் உலக தமிழ் இனம் ஒன்று பட்டு இருக்கும் இந்த வேளையிலே, மும்பையிலும் தமிழர்கள் தங்கள் ஆதரவை காட்டும் முகமாய். 01 - 03 - 2009 ஞாயிறு மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை "மாதுங்கா கிங் சர்கிள் - தானே" ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையேயான 25. கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலியை தங்கள் உணர்வுடன், தமிழ் உணர்வுடன் ஏற்படுத்தினர். இது வெறும் மனித கரங்கள் அல்ல. உலக தமிழ் மக்களுக்காக, அல்லல்படும் மக்களுக்காக நீட்ட பட்ட அன்பு கரங்கள். உலகில் நாம் எங்கெங்கு பிரிந்து இருந்தாலும், நம் உயிரும், உணர்வும் ஒன்றே என உணர்த்த சேர்ந்திட்ட ஆதரவு கரங்கள்.

"ஏய்... தமிழ் மக்கள் விரோத அரசே, பாரு எங்கள் ஒற்றுமையை, எங்கள் தமிழரை காப்பாற்று" என்று அணி திரண்டு, இன்னல் படும் மக்களுக்கு தங்கள் ஆதரவை காட்டி நின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான அரசுக்கு தன் பலத்தை காட்டி நின்றனர். அல்லல் படும் மக்களுக்கு ஆதரவாய், தன் சமுதாய எழுச்சிக்காக கூடி நின்றனர். உலகெங்கும் உள்ள தன் தமிழ் மக்களுக்கு ஆதரவை கூட்டி நின்றனர். தமிழ், தமிழன் என்று முழங்கி அவன் நிமிர்ந்து நிற்க, இங்கே தன் நெஞ்சு நிமிர்த்தி நின்றனர். ஒற்றுமை எனும் ஆயுதம் ஏந்தி.

இந்த மாபெரும், மனித சங்கிலி போராட்டத்தை, தமிழ் உணர்வை, இன ஒற்றுமையை காட்டும் நிகழ்ச்சியை பல இயக்கங்கள், பல சங்கங்கள், பல அமைப்புகள், ஒன்று சேர்ந்து நடத்தியது. அது உலக மக்களுக்கு உணர்த்தியது, தமிழும், தமிழ் உணர்வும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று.

இந்த கரப் பினப்பிலே, இது ஆண்டான் கரம், இது அடிமை கரம், இது படித்தவன் கரம், இது படிக்காதவன் கரம், இது ஏழை கரம், இது செல்வந்தன் கரம், இது கருப்பன் கரம், இது செவத்தவன் கரம், இது வெளுத்தவன் கரம், இது சாப்பிட்டவன் கரம், இது சாப்பிடாதவன் கரம், இது கூலி தொழிலாளி கரம், இது பொறியாளன் கரம், இது மருத்துவன் கரம், இது நோயாளியின் கரம், இது முதிர்ந்த கரம் இது பிஞ்சு கரம் என்று பேதம் தெரியவில்லை, "நாம் அனைவரும் சமம் ஒன்று" என்று வேதம் தெரிந்தது.

வாழ்க தமிழ்.
வளர்க தமிழ் உணர்வு.
ஓங்குக தமிழனின் ஒற்றுமை.