Wednesday, 22 April 2009

வெட்கமாய் இல்லை இப்படி ஓட்டு கேட்க??

தமிழகத்தில் தேர்தல் - 2009 போட்டி நடக்கிறது. .தெரிந்த விஷயம். அதிக ஓட்டுக்கள் பெறுபவர் வெற்றிபெறுவார்... தெரிந்த விஷயம்..

தன் ஆற்றலினால், நல்ல எண்ணங்களினால் , நோக்கினால் சிறந்த வேட்பாளர்கள் எத்தனையோ இருக்கின்றார்கள். நேர்மையாக எல்லா வேட்பாளர்களையும் முடிந்த வரை ஆராய்ந்து அல்லவா ஓட்டு இட்டு ஒருவரை வெற்றி பெற செய்யவேண்டும்?..

ஒருத்தர் இன்று பதிவிட்டு இருக்கிறார்...

அவர் யாருரென்று எனக்கு தெரியாது. இது வரை என் பதிவுகளிள் நான் அவரை பார்த்தது இல்லை. பதிவு எழுதுகிறவர்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரி. சரி மக்கள் தொண்டு செய்து பெயர் பெற்றவரா? அல்ல வேறு மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்தவரா? அடித்தட்டு மக்களுக்காக தன் உடமை அத்தனையையும் இழந்தவரா? ஆனால் இது வரை இப்படி எதையும் செய்யாதவர். இப்போது வந்து இரண்டு வார்த்தை அவரை எல்லாரும் புகழ்கிறார்கள் என்று சொல்லி, தானும் சொல்லிவிட்டு, அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று...

ஒரு அரை பக்கத்திற்கு அவரின் சுய வாழ்வை பற்றி எழுதிவிட்டு, அந்த வேட்பாளரே, நடத்தும் வலைபக்கங்களின் சுட்டிகளை தனித்தனியாக சுட்டி ஓட்டு போடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்...

என்ன சுயநலம் ? எத்தனை சாமர்த்தியம்...?!! இப்படி கேவலமாக ஓட்டு கேட்க வேண்டுமா? சரி கேட்டாரே.. தனி மடல் அனுப்பி கேட்டு இருக்கலாம், கண்டிப்பாக கோபம் வந்து இருக்காது... சரி இமெயில் கிடைக்கவில்லை என்றால் சாதா மெயில் எழுதி அனுப்பி இருக்கலாம்.. எதுவும் இல்லாமல் தன்னுடைய ப்ளாக்'ஐ அவரின் ஓட்டு வேட்டை நடத்தவும், விளம்பர இடமாகவும் பயன்படுத்திக்கொள்ள நல்ல யுத்தியை முயற்சி செய்து இருக்கிறார். !! சின்ன சின்ன விஷயத்தில் கூட நம்மால் நேர்மையாக நடந்து கொள்ள முடியவில்லை.?. இப்படி எல்லாம் ஓட்டு வாங்கி வெற்றி பெற வேண்டுமா?

இப்படி எத்தனை 'ப்ளாக்' அவர் செய்து இருக்கிறாரோ தெரியவில்லை...

தமிழகத்தில் வெற்றி பெறுபவர் இப்படிப்பட்ட ஓட்டுகளினால் தான் என்றால்.. நினைத்து பார்க்கவே வேதனையாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக நல்ல வேட்பாளர்கள் பின்னால் தள்ளப்படுவர். இப்படி ஓட்டு கேட்டு தன் வேட்பாளர்களை முன் நிறுத்த தெரியாத பலர் காணாமல் போவார்கள். இப்படி கேவலமாக கொஞ்சமும் நாகரீகமும், நேர்மையும் இல்லாமல் தன் சுய வியாபார உக்திகளினால் வென்ற வியாபாரிகள் ஓட்டுகள் வாங்கி முதலில் நிற்பர்...

எனக்கு பிடிக்காத பட்சத்தில் கண்டிப்பாக அந்த பதிவை ரிஜெக்ட் செய்ய எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது இப்படி பதிவு போட வேண்டிய அவசியமில்லை தான். ஆனால் மேலே சொன்ன படி அவர் சுய வாழ்வில் என்ன செய்தார் என 2 வரிகள் எழுதாமல், நேரடியாக ஓட்டு கேட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் நானும் படித்து பார்த்து பிடித்து இருந்தால் ஓட்டில் சேர்த்து இருப்பேன், இல்லையேல் விட்டு இருப்பேன்..ஆனால், தன்னை மிகவும் சாமர்த்தியசாலியாக நினைத்து, தன் பதிவுக்கு வருபவர்கள், பொது 'பார்வைகள்' அற்றவர்கள் அத்தனை பேரும் மூடர்கள், ஒருவரின் சுய வாழ்வை மட்டும் தந்து, பொதுவாழ்வில் என்ன சாதித்தார் என்று தராமல் ஓட்டு கேட்கலாம் என நினைத்து, ஓட்டு கேட்க வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள, தன் பதிவினை பயன்படுத்திக்கொள்ள நினைத்து போடப்பட்ட பதிவு என்பதால் இதை எழுத வேண்டியதாகிவிட்டது. தன் பதிவை பற்றி, கருத்தை பற்றி ஒரு வரி கூட யாரும் எதிராக எழுதக்கூடாது என்று அவர் நினைத்தால்.. :)))) அப்படி ஒரு பதிவும், பதிவரும் எனக்கு பொதுவில் தேவையில்லை.!! :)))

அவரின் பெயரை குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.. காரணம் அதனால் திரும்பவும் அவருடைய பதிவுகள் என்னால் விளம்பரப்படுத்தபடும்.

இப்படி கேவலமாக ஓட்டு கேட்பதை விட தோற்று போகலாமே?!!

Friday, 17 April 2009

சும்மா இருக்கிறதே நலம். (அரசியல் பதிவல்ல..!)

மக்களே... நாம பிறரை கேலி செய்வதற்கு சொல்லும் சில நல்ல வார்த்தைகளில் ஒன்று தான் "அவன் சும்மா தான் இருக்கான்" . ஆனா "சும்மா இருத்தல்" என்பது சும்மா இல்லை. இந்த கருத்து சும்மா இருக்கிற பல பேருக்கும் தெரியாது, சும்மா இருக்கிறமாதிரி நடிக்கிற ஆளுங்களுக்கும் தெரியாது குறிப்பா வேலை பார்க்கிற மாதிரி நடிச்சிக்கிட்டு சும்மா இருக்கிறவங்களுக்கும் தெரியாது. (டேய்... டேய்... டேய்... யார்ரா அவன் உன்னை மாதிரியான்னு சவுண்டு விடுறவன்.....???? சும்மா அமைதியா இருந்து கேளு பார்த்துக்க....)

சும்மா.., அனாயாசமா, ஐம்புலனையும் அடக்கி ஆளும் வல்லமை உள்ள ஒருவனாலே தான், "சும்மா" இருக்க முடியும். சரி..! ஒரு 'ஒப்பன் சாலஞ்சு'!, நீங்களே ஒரு அஞ்சு நிமிடம் சும்மா இருந்து பாருங்களேன்....? என்ன? "சும்மா" இருந்து பார்க்க முயற்சியா? சும்மா, எதுக்கு வீண் முயற்சி, நீங்களே "சும்மா" இருக்க முடியாமை தானே இங்கே பதிவு படிக்க வந்திருக்கீங்க???? அப்புறம் எதுக்கு சும்மா, முண்டாசை கட்டிக்கிட்டு இறங்குறீங்க???

நாட்களையும் சரி வீட்லயும் சரி, நாம சும்மா இருந்தாலே போதும், ஒரு பிரச்சினையும் வராது, அப்படியே சில பிரச்சினைகள் வந்தாலும் அதில் பல பிரச்சினைகள் தானாவே அடங்கிரும். ஆனா நம்மாலே தான் சும்மாவே இருக்க முடியாதே?

இப்ப நாட்டு பிரச்சினை அளவுக்கு நாம போக வேண்டாம், வீட்டு பிரச்சினையை பார்ப்போமே..... வீட்லே நீங்க வேலைக்கு போகம சும்மா இருந்தா..., "வேலைக்கு போகாம சும்மா இருக்கிறான்" அப்படின்னு ஒரு பிரச்சினைதான், அதை பல பேரு சும்மா, சும்மா சொல்லிக்காட்டுவாங்க, அதையும் கேட்டுட்டு சும்மாதான் நாம இருப்போம், இருக்கணும், நல்லதுக்காக. ஆனா அதே சமயத்திலே நீங்க சும்மா இருக்காமே, சும்மா வேலை தேட கெளம்பிட்டீங்க அதுலே எவ்ளோ பிரச்சினைகள் இருக்கு?

1. நமக்கு ஏத்த மாதிரி வேலையா இருக்கணும்.

2.அந்த வேலை பற்றிய எல்லா விஷயமும் தெரியனும்.

3. அந்த வேலைக்கு வைக்கிற நேர்காணலில் நாம் வெற்றி பெறனும்.

4. வெற்றி பெற்ற பிறகு அவங்க தருகிற சம்பளத்திற்கு நாம சம்மதிக்கணும், இல்லை நாம கேட்குற சம்பளத்திற்கு அவங்க சம்மதிக்கணும்.

5.அந்த பேசுன சம்பளத்திற்கு நாமும் உருப்படியா வேலை பார்க்கணும். இல்லை நாம வேலை பார்த்த பிறகு அவங்க பேசின மாதிரி சம்பளம் தரனும்.
.
.
.
.
.
.
இன்னும் உள் அரசியல், பக்கத்துக்கு சீட்லே சூப்பர் பிகரு என்று பல பிரச்சினைகள் இருக்கு....

இப்போ சொல்லுங்க சும்மா இருக்கிறதே தானே நலம்.

சரி... சும்மா பதிவை படிக்க வந்த நீங்களும் சும்மா போயராதீங்க...! சும்மா மானாவாரியா நமக்கு ரெண்டு பின்னூட்டத்தை வாரி வழங்கிட்டு போங்க.

என்னது.....???? காசா ??? 'சும்மா' தான் பாசு போட சொல்றேன்.

அப்புறம் இவ்ளோ நலம் கொடுக்கிற "சும்மா இருக்கிறது" எவ்ளோ கடினம் என்பதை அடுத்த பதிவிலே, நான் சும்மா இருந்தா போடுறேன்....

Wednesday, 15 April 2009

செய்யுமா? தினத்தந்தி...

தமிழகத்திலே பாமரனையும் படிக்க தூண்டிய பத்திரிக்கை தினத்தந்தி என்றால் அது மிகையோ? இல்லை, இல்லவே, இல்லை. அல்லவா? அது மக்களுக்கு செய்தியை வழங்கிய விதங்கள் மற்றும் சொல் பயன்பாடுகளும் மக்களுக்கு சென்று அடைந்தது அல்லவா? அது மக்களுக்கு வழங்கிய சொற்றொடர்கள் குறிப்பாக இரட்டை கிளவிகள் இன்றும் மக்கள் மனதிலே நீங்கா இடம் பிடித்து இருக்கிறது அல்லவா? அந்த இரட்டை கிளவிகளை நான் இங்கே பதிந்தால் அது உங்களை நான் கதற-கதற, மாறி-மாறி கொடுமை செய்தவனாவேன். நீங்களும் என்னனை சதக்-சதக் என குத்திக் கிழிக்க கொடுவாளை தேடி புறப்பட்டு விடுவீர்கள்.

தினத்தந்தி; தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அளப்பரிய தொண்டு செய்துள்ளது. அந்த தொண்டுக்கு எனது மரியாதை மற்றும் வணக்கங்கள். இன்றும் இங்கே மும்பையிலே அதன் பதிப்பு வருகிறது. இங்கே இருக்கும் சில மக்கள் தமிழ் மொழியை மறந்து விட கூடாது என்பதற்காகவும், தற்போதுள்ள இளைய தலைமுறையினர் தமிழை அறிந்து கொள்ளவும், அந்த பதிப்பிலே "தமிழ் கற்றுக்கொள்ளலாம் வாங்க" என்று தலைப்பிட்டு, அழைப்பு விடுத்து ஒரு பகுதி ஒதுக்கி தமிழை சொல்லிக்கொடுக்கும் முறையாக பாடங்களை வரிசையாக பதிக்கிறது. நன்றி நன்றி. நன்றி.

சரி. இப்போது விடயத்திற்கு வருகிறேன், அந்த பாடங்களில் சில வடமொழி எழுத்துக்களையும், தமிழ் எழுத்து என்றே சொல்லி வருகிறது? அது எப்படி சரியாகும்? இது வடமொழி எழுத்து, என்று முதலிலேயே அறிவுறுத்த வேண்டாமோ? அது நாம் சொற்களை பலுக்குதலுக்கு வேண்டி பயன்படுத்துகிறோம் என்று கூறவேண்டாமோ? இனி வரும் பதிப்பிலாவது அப்படி அறிவிப்பை செய்து தொடருமா? தினத்தந்தி.

இது ரொம்ப முக்கியமா? என்று கூறாதீர்கள். இது முக்கியமே. ஒரு மொழிக்குன்டான எழுத்துக்களே சரிவர அறியாமல், தெரியாமல் நாம் எப்படி அந்த மொழியை கற்றவர்களாவோம். இதை ஒத்துக்கொண்டால், தமிழ் எழுத்துக்கள் எத்தனை? என்ற அடிப்படை இலக்கணமே மாறிவிடுகிறதே? அதற்காக தான் இந்த பதிவே. நாமும் சொல்லவில்லை என்றால் பின் யார்தான் சொல்வது.

நிற்க. "போய் புள்ளைங்களை படிக்க வைங்கடா" என்றும் " இதை விட்டு விட்டு போய் வேறு வேலை பாரு" என்று சொல்ல முனையும் அனானி நண்பர்களே, தயவு செய்து நீங்கள் வேறு வேலை பார்க்க போய், ஆக்கமா சிந்தியுங்கள். மற்ற நண்பர்கள் நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உங்கள் கருத்துகளை பின்னூட்டமாய் சொல்லி விட்டு, போங்களேன்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Monday, 13 April 2009

விசை படம், அசீத்து படம் மற்றும் உலகப்படம்.


இப்போதெல்லாம் விசை படம், அசீத்து படம் பார்த்தால் அறிவிலியாம். உலகப்படம் பார்த்தல் தான் அறிவாளியாம். அதனாலே நான் மட்டும் அறிவாளியாக வேண்டாம் என்று நினைத்து சக பதிவர்களையும் அறிவாளியாக மாற்றவே இந்த முயற்சி.
அறிவாளியான மக்கா.... அப்படியே கொஞ்சம் பின்னூட்டமும் போட்டு எவ்வளவு பேரு அறிவாளி ஆகி இருக்கீங்கன்னு சொல்லிட்டு போங்க கண்ணுகளா....
.

Thursday, 9 April 2009

ரயில் பயணங்களில்...!!!

மதுரை ரயில் நிலையம். ஈரோடு வழியாக பெங்களூர் வரை செல்லும் ரயிலுக்காக காத்திருந்தேன். பிளாட்பாரம் எங்கும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனர். வண்டி அரை மணி நேரம் தாமதமாக வந்தது. வண்டியின் உள்ளேயும் பயங்கர ஜனத்திரள். எல்லோருக்கும் பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கிறது ஆனால் பணம்? (அட நமக்குள்ளும் தத்துவ முத்தா? கண்ட்ரோல் பண்ணுடா என்று ஒரு பெருங்குரல் என்னுள்ளே). கஷ்டப்பட்டு அடித்து பிடித்து ரயிலில் ஏறினால் நிற்கக் கூட இடம் இல்லை. பின்னே முன்பதிவு செய்திருப்பவர்கள் போன்று வசதி எல்லாம் நான் எதிர்பார்க்க முடியுமா? என்னருகில்.. ஒரு பாட்டி கையோடு ஒரு சிறு குழந்தையையும் கூட்டி வந்து இருந்தார்கள். அழகான, பெரிய பேத்தி வீட்டில் இருப்பாளோ என்று என் சிந்தனைய தூண்டியது பழனிபாரதியின் வரிகள்.

"தம்பி.. கொஞ்சம் இடம் விட்டீங்கன்னா வயசானவ உக்காந்துக்குவேன்.."

"ஆமா நீயெல்லாம் வரலேன்னு... இப்ப யாரு வருத்தப்பட்டா?" என்று என் மனதில் தோன்றிய எண்ணம், "பரவா இல்லை பாட்டி.. இப்படி கீழ உக்காருங்க.." என்று வார்த்தை முத்தாய் உதிர்ந்தது. இனி பழனிபாரதியின் பாடல்களையும் கேட்பதில்லை என்று "தேர்தல் கால" கொள்கை முடிவு எடுத்தேன்.

மெதுவாக கீழே அமர்ந்தவர், சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடி கேட்பார்கள்.." சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்து கதவை ஒட்டி நின்று கொண்டேன். ரயில் நகரத் தொடங்கி இருந்தது. காற்று மிதமாக என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. இரவின் குளிர் காற்றில் எங்கும் பாவி இருந்தது. ஒரு கட்டிங் ஓல்டு மாங்கினால், உடல் சுகமாய் இருந்து, உள்ளம் தான் ஆர்பரித்து ஆடியது. "அவன்" கண்ணில் மட்டும் பட்டு விடவே கூடாது என்றும் மனம் வேண்டியது.

என்னை ஒட்டி நின்று இருந்த சிலர் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். வடமாநிலத்தவர், வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? ஆம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, தமிழர்கள் வெறுப்பது தேவை இல்லாமல் புகுத்தப்படும் ஹிந்தியை தான், ஹிந்தி மொழி பேசுபவர்களை அல்ல. சரிதானே... அவர்கள் எண்ணம் சரிதானே. இதை இங்குள்ள சில மக்களுக்கு புரிய வைப்பது எப்படி? எனக்குள் நிறைய கேள்விகள்.

வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் இருள், மரங்களும் தந்திக் கம்பங்களும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன. எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது. ஆம் 'அவன்' கையில் மட்டும், நான் சிக்கினால், என் வாழ்கையும் பின்னோக்கி ஓடி விடும், இருண்டு விடும். வாசற்படியில் அமர்ந்து இருந்த ஒரு ஹிந்தி இளைஞன் காதில் செல்போனை மாட்டிக் கொண்டு சத்தமாக பாடிக் கொண்டு இருந்தான். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். ஆனால் ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. சட்டென்று தீர்ந்து போன பிரிபெய்ட் பாலேன்சு போல போல, எனது பதிவு கண்டு மக்கள் ஒடுங்குவது போல் அவனுடைய பாடல் தானாகவே தொலைந்து போனது. எதற்காக அவன் பாடலை நிறுத்தினான்? நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அன்றைய சூழலில் நான் அப்படி நினைக்க வில்லை. எனக்கு எப்போதுடா? ஈரோடு நிலையம் வரும் என்று இருந்தது. எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. இவன் வேறு பாட்டு பாடி வம்பை இழுத்து விடுவானோ என்ற பயமும் தான். மெதுவாக ரயிலின் உள்ளே திரும்பி நின்று கொண்டேன்.

சிறிது நேரத்திற்குப் பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. ஏதாவது கிராசிங்கா இருக்கும் என்றார்கள். வெகு நேரமாக வண்டியின் உள்ளேயே இருந்ததால் மூச்சு முட்டுவது போல் இருந்தது. கொஞ்ச நேரம் கீழே நிற்கலாம் என்று இறங்கினேன். ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஒரு மனிதர் "கடலை சார், டைம்பாஸ் கடலை சார்.." என்று கத்தியவாறே கடலை விற்றுக் கொண்டிருந்தார். அட பரவா இல்லையே, இவன் சாதரண ஆள், இல்லை. எவ்வளவு சுலபமா வாழ்கை தத்துவத்தை சொல்லி போகிறான், "கடலை", "கடலை", "டைம்பாசுக்கு கடலை". ஹும்ம்.... இதையே மூணு லைன்லே மூணு வாட்டி எழுதி ப்லோகுலே போட்டு பெரிய கவுஜைன்னு சொல்லி பேரு வாங்கிரனும். என்று முடிவு செய்து, அருகில் கிடந்த சிமென்ட் பெஞ்சின் மீது படுத்துக் கொண்டேன். படுத்துக் கொண்டே கவுஜைக்கு தலைப்பு யோசிக்கலாம் ஆனால் என்னோட நிலைமை இப்ப அப்படியா இருக்கு.... விரித்து வைத்த கடலை பேப்பராய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெள்ளை கடலைகளாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன. நிலா ஏதோ ஒரு மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருந்தது வட்ட வடிவ வெள்ளரி துண்டு தட்டுக்கு கீழே ஒளிந்து கொள்வது போல. பொதுவாக எனக்கு தனிமை பிடிப்பதில்லை. எனக்கு கும்பல் தான் பிடிக்கும், அதுவும் இப்போதைய எனது நிலைமைக்கு கண்டிப்பா தனிமை கூடவே கூடாது.

திடீரென.. யாரோ என்னை பார்ப்பதுபோல் ஒரு குறுகுறுப்பு. ஐய்யையோ அது அவனாக மட்டும் இருந்து விடவே கூடாது என்று மனது ஓலமிட்டது. ஆனால் அது ஒரு பெண். என்னை திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் இனம் புரியாத ஒரு ஆர்வமும் சிநேக பாவமும் இருந்தன. அவள் என்னை ரசித்து கொண்டு இருந்திருக்கிறாள். (ரசித்து???? என் மனம் அப்படிதான் ஒயிலாட்டம் போட்டது.) எனக்கு அவளைப் பார்க்கையில் சொல்லவொண்ணாத உணர்வுகள் தோன்றின. முக்கால் மணி நேரம் கழித்து ரயில் கிளம்பியபோது நான் அவளை எனக்கு மிகவும் நெருக்கமானவளாக உணர்ந்தேன்.

ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது மணி ஒன்றாகி இருந்தது. அந்தப்பெண்ணும் ஈரோடுதான் போல.. இறங்கி எனக்கு முன்னே நடக்கத் தொடங்கினாள். அந்தப் பெண்ணின் முகமும் அவள் உதடுகளில் தேங்கி நின்ற சிரிப்பும் எனக்குள் நன்றாக பதிந்து விட்டிருந்தது. அவள் நின்று, என்னைப்பார்த்து கை அசைப்பாளா என்று ஏக்கத்துடனே சென்றேன். "அட.... அவளை எதிர் கொண்டு அழைக்க வந்திருப்பது யார்? அவளோட அண்ணனோ........? தம்பியோ.......? சத்தியமாக புருசனாக மட்டும் இருக்கவே கூடாது." அடுத்த விளக்கு கம்பத்து விளக்கில் பார்த்த போது, தெரிந்தது......

அட அவனே தான், அவனே தான்... ஈரோடு ரயில்வே போலிசின் ஏட்டு...! அய்யயோ இவன் கண்ணில் தானே படக்கூடாது என்று இருந்தோம். அப்படியானால் இவள்??? அவள் தான், அவளே தான். அன்று மதுரை ரயில் நிலையத்தில் போட்டு அடி பெண்டு நிமித்தினாலே அவளே தான். மதுரை ரயில்வே போலிசின் பெண் சப்-இன்ஸ்பெக்டர். அடச்சே...! வாய்க்குள்ளே நுழையாத பேரு வச்ச புஸ்தகமெல்லாம் படிச்சி, அதெல்லாம் ஞாபகத்திலே இருக்கு, வர்ணனையா வருது... நாயடி, பேயடி கொடுத்த இவளை எப்படிடா மறந்தோம்? இனி ரயில்லே எவனாவது படிச்சிட்டு வச்சிட்டு போன புஸ்தகத்தை எடுத்து படிக்கவே கூடாது. அப்படியே படிச்சா மனசிலே வசிக்க கூடாது. அப்படியே மறந்துறணும் மனசுலே வச்சி ப்லோகுலே எழுதி பேரு வாங்க நெனைக்க கூடாது. அவனே அதை படிக்க முடியாமே, மரண அவஸ்தையிலே தானே வச்சிட்டு போய் இருப்பான்.

நான் ரயிலை பிரிந்து, அவளையும் மறந்து தப்பி ஓடினேன். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. "ஜேப்படிகள்" தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். "ஜேப்படிகள்" தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதை நான் தேர்தல் நேரம் என்பதால் சொல்லவில்லை, நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை, நகைச்சுவை, நகைச்சுவைக்காக மட்டுமே.

இது பொன்னியின் செல்வன் - கார்த்திகை பாண்டியன் அவர்களின் பதிவுக்கு எதிர் பதிவே.

அனுமதி கொடுத்த பொன்னியின் செல்வன் - கார்த்திகை பாண்டிக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Wednesday, 8 April 2009

அயனும் - மாற்றுப்பார்வையில் சில கருத்துகளும்


அயன், அயன், அயன் இப்போதைக்கு நல்லா கல்லா கட்டுற சரக்கு இது தாங்க. கோபுரத்துலே இருந்தாலும் குடிசையிலே இருந்தாலும் அயனுக்கு மயங்காதவங்க யாரு? இப்போ, சும்மா இருந்தாலும் மிடுக்கு மற்றும் பகட்டுக்காக அயன். பெரிய வேலையில் இருந்தால் பந்தாவிற்காக அயன், என்று அயன் பெருமை எங்கும் இருக்கிறது.

சரி, இப்படி இருக்கிற அயன் என்ன? என்ன? நல்ல பலன்களை தருகிறது என்று பார்ப்போமா? நீங்க இப்ப வேலை தேடுகிற நபரா இருந்தா அயன் பண்ணாத ஷர்ட்டை போட்டுட்டு போனா உங்களுக்கு வேலை கிடைக்குமா? நீங்க, உங்க லவ்வரை பார்க்க போறீங்க அயன் பண்ணாம நீங்க போவீங்களா? நீங்க கல்யாணம் ஆகி தங்கமணி, ரங்கமணியா இருக்கீங்கன்னு வையுங்க, நீங்க தான் எல்லா வேலையும் செஞ்சு வைப்பீங்கன்னு நீங்க சொல்லாமலே எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும், உங்க தங்கமணி விரும்பி கட்டுற அவங்க அம்மா வாங்கி கொடுத்த புடவையை சஸ்பன்ஸா அயன் பண்ணிவைங்க, அப்புறம் பாருங்க உங்களுக்கு வீட்லே கிடைக்கிற மரியாதையை. அவசரத்திலே வேலைக்காரி புடவையை அயன் பண்ணிவைத்து, ஏற்படும் விபத்துகளுக்கு கம்பனி பொறுப்பு ஏற்காது?

இவ்ளோ நல்ல பலன்களை கொடுக்கிற அயனை எப்படி பண்றது? அதை பற்றி நீங்க ஒன்னும் ரொம்ப அலட்டவேண்டாம், வெளியே போய் பார்தீங்கன்னா...? நம்ம அன்பர் ஒரு வண்டியை வச்சிக்கிட்டு, கூடவே ஒரு அயன் பெட்டியும் வச்சிருப்பார் அவர்கிட்டே கொடுங்க அவர் சூப்பரா அயன் பண்ணி தருவார். அவருக்கு ஒரு மூணு ரூபாயை கொடுங்க, முடிஞ்சது. மூணு நிமிசத்துக்கு உள்ளேயே உங்க வேலையும் முடியும் அவருக்கும் கொஞ்சம் கல்லா கட்டும். நீங்களும் சந்தோசமா இருப்பீங்க அவரும் சந்தோசமா இருப்பாரு.

இப்படி அயன் பண்ணி போட்டீங்கன்னா, கல்யாணம் ஆகாத கட்டிளம் காளையர் இந்த சூர்யா போல, தமன்னா மாதிரி ஒரு பிகரோட செட்டாவீங்க. கல்யாணம் ஆன, மூக்கணாங்கயிறு போட்ட காளைகள், இந்த படத்திலே இருக்கிற மாதிரி ஒரே ரொமான்சா இருக்கலாம். தமன்னா கூட இல்லை சாமிகளா....! உங்களோட தங்கமணிகளோட.

அப்புறம் எதுக்குடா 'அயன்' படத்தோட போட்டோ போட்டிருக்கே அப்படின்னு கேக்குறீங்களா. அது சும்மா விளம்பரத்திற்கு. என்னோட விளம்பரத்திற்கு என்று நினைக்காதீங்க. படத்தோட விளம்பரத்திற்கு. அப்புறம் ரொமான்சிற்கும், பிகருக்கும் சாம்பிள் காட்டவேண்டாம்...! அதுக்குதான்.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஹேய்... ஹேய்.... பேச்சு.. பேச்சா தான் இருக்கணும்... என்னை அடிக்க விறகு கட்டையெல்லாம் தேடி எடுத்து வரக்கூடாது. ஆமா சொல்லிப்புட்டேன். உங்களுக்கு அவ்ளோ கோபம் வருதா? உங்க கோபத்தை கொஞ்சம் பின்னூட்டத்திலே காட்டிட்டு போங்க, கோபம் இல்லை என்றாலும் பின்னூடத்திலே சொல்லிட்டு போங்க.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Friday, 3 April 2009

வலி மிகும் இடங்கள், மிகா இடங்கள்...

வாங்க வாங்க கண்ணுங்களா, வந்துடீங்களா, ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை இன்னிக்கு உங்களுக்கு சொல்லபோறேன். இன்னைக்கு நம்ம இணையத்துலே தப்பில்லாம யாரு எழுதுறா? சொல்லுங்க பார்போம். ....

@#$% ரு ...., *&^%ரு..... , *&^$#ரு.....

வெய்ட். வெய்ட். இருக்காங்க... இருக்காங்க.. விரல் விட்டு எண்ணுற அளவிற்கு தானே இருக்காங்க. ஆனா தப்பும் தவறுமா, சக்கையும் மொக்கையுமா எழுதரவங்கதானே அதிகமா இருக்காங்க.

இவங்கல்லாம் எழுதுனா தானே சொட்ட டாமேஜர் கிட்டே இருந்து நமக்கும் கொஞ்சம் ரிலீப் கிடைக்கும், டைம் சீட்லே "ஸ்கில்ஸ் இம்ப்ரோவமேன்ட்" 4 அவர்ஸ் அப்படின்னு பில் பண்ண முடியும்? இவங்க எழுதலை என்றால் என்ன ஆகும் கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க... அப்புறம் பூட்ட கேசுங்க படிக்கிற மாதிரி தான் பதிவுலகமும் இருக்கும். இந்த நெலைமை இப்படி இருக்கும் போது திடீர்னு நம்ம சிங்கை பதிவுலக சிங்கம், அண்ணன் கோவியாரு தப்பா எழுதுரவங்கல்லாம் இனி எண்ணத்தையும் எழுதி கிழிக்க வேண்டாம் என்று சொல்லிட்டு போய்ட்டாரு.

நாம யாரு சொன்னாலும் கேட்க மாட்டோம் அப்படிங்குறது, நமக்கு மட்டுமே தெரிஞ்ச உலக ரகசியம். சரி, அப்படியும் சில தப்பி பொறந்த மானஸ்தன் இருந்து எழுதுறதா நிறுத்தி, நாம பதிவு படிக்கிற கொரசிட்டா, அப்புறம் இங்கே டைம் சீட்லே "ஸ்கில்ஸ் இம்ப்ரோவமேன்ட்" 4 அவர்ஸ் அப்படின்னு எப்படி பில் பண்ண முடியும்?

இதற்கு ஒரு மாற்று கண்டு பிடிச்சே தீரனும், எழுதுறவங்க, எழுதிகிட்டே இருக்கணும் படிக்கிறவங்க படிச்சிக்கிட்டே இருக்கணும். அப்ப தப்பு தப்பா எழுதுறவங்களை என்ன செய்யிறது? அதுக்குள்ளே அவசரப்படாதீங்க,
அதுக்கு தானே வலி மிகும் இடம், வலி மிகா இடம் பற்றி ஆராச்சி பண்ணி வச்சிருக்கேன் சொல்லுவோம்லோ?

இந்த காது மடல், கன்னம், மொழி என்று சொல்லக்கூடிய விரல் மூட்டு இதெல்லாம் வலி மிகும் இடங்கள் இங்கே நாம் ஒன்னும் செய்யக் கூடாது. உள்ளங்கை, கால், பின்புறம் ஆகியவைகள் வலி மிகா இடங்கள் இங்கேயும் நாம ஒன்னும் செய்ய வேண்டாம், அவர்களின் பதிவை படிச்சிட்டு ஒரு ஸ்மைலிய போட்டுட்டு நண்பா இங்கே, இங்கே இன்ன இன்ன தப்பு இருக்கு என்று சொல்லிக்காட்டுங்க. அந்த பதிவருக்கும், உங்களுக்கும் ரொம்ப நெருக்கம் என்றால் மேற்கண்ட இடங்களில் செல்லமா ரெண்டு அடிய போட்டு கரெக்க்டா எழுத சொல்லுங்க.

என்னது?தமிழ் பாடம்னு நெனச்சி வந்தீங்களா? இப்படி ஐடியா கொடுத்த என்னை தேடி வாரீங்களா... க்கும்... இப்படி எதை, எதையோ நெனச்சி நெனச்சி ஏமாந்து போறதே உங்க பொழப்பா இருக்கு, இப்ப எலெக்சன் வேற வருது!!!! ஐ அம் எஸ்கேப்பு .....

ஹாய்... ஹாய்... நீங்க எங்கே எஸ்கேப்பு ஆறீங்க.... பின்னூட்டம் போட்டுட்டு போங்க...

Wednesday, 1 April 2009

எச்சரிக்கை, இன்று முட்டாள்கள் தினம். உஷாரா இருக்க சில டிப்ஸ்.

இன்று உலகம் முழுதும் முட்டாள்கள் தினம் கொண்டாட படுகிறது. நீங்கள் ஏமாற்றப்படாமல் இருக்க நீங்கள் நீங்களாவே இருங்கள். ஏன் இப்படி எச்சரிக்கை, டிப்ஸ், ஐடியா என்று சொன்னவுடன் உங்க சொந்த மூளைய நம்பாம வரீங்க.

போங்க சாமிகளா போங்க, அப்படியே பின்னூட்டம் போட்டுட்டு போங்க. பின்னூட்டம் போடுறவங்க தான் புத்திசாலிகள் என்று அனைவருக்கும் தெரியும். நான் புதுசா ஒன்னும் சொல்ல வேண்டியது இல்லை..