Tuesday 24 February 2009

"பொங்கு பீர் வாழ்க்கை" -'shake'கிழார்.

நைனா, விவசாயி, போண்டா, நாட்டமை, குச்சி, ஆத்தா, அழுக்கு, கொல்ட்டி, தல, விஜயகாந்து மன்சூர்அலிகான் அனைவரும் அங்கே ஆஜர். இதெல்லாம் படிச்ச உடனே அதை எதோ அரச மரத்தடி, ஊர்கூட்டம் என்று நினைக்க வேண்டாம். இவர்கள் எல்லாம், ஜாவா, ஆரகில், டாட் நெட், டெஸ்டிங், டேட்டா, டேட்டா பேஸ், டேட்டா வேரௌசிங், நெட்வொர்கிங், அட்மின் என அந்த அந்த டெக்னாலஜியில் கொட்டை தின்னு பழம் போட்டவங்க.

வேற வேற ஊரிலே இருந்து வந்திருந்தாலும், இன்று அனைவரும் ஒன்று. குச்சிக்கு சுகமில்லை என்றால் ஆத்தாவும், நைனாவும் லீவு போட்டு விட்டு இருந்து சரக்கடித்து கொண்டே கவனித்து கொள்வார்கள், விஜயகாந்து பிகர் மடிக்க மன்சூர்அலிகான் உதவி செய்து அடியும் வாங்குவார், விவசாயி சாப்பிட நாட்டாமையும், கொல்டியும் பணம் போட்டு சாப்பாடு வாங்கி வருவார்கள், இப்படி பல சொல்ல முடியும் என்றால் அந்த பாசப்பிணைப்பை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


சனிக்கிழமை மாலை, 'ரம்'மடித்து, ரம்மி ஆடும் 'ரம்மி'யமான பொழுது...

"ஹே மாப்ஸ் ... இன்னைக்கு நம்ம 'அழுக்கோட' ஆளு அவனுக்கு பல்பு கொடுத்துட்டு போய்ட்டா...அதனாலே மச்சான் ரொம்ப பீலிங் ஆவுறான்...அவனோட சந்தோசமோ துக்கமோ நாம பங்கெடுக்கணும் இல்லையா... அதனாலே இன்னைக்கு கச்சேரி வச்சிருக்கு, இங்கே உள்ள குடிமகன்களெல்லாம் வருகை தந்து விழாவை சிறப்பித்து தரும்படி கேட்டு கொள்ளபடுகிறார்கள்.."

"ஹுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........"

"நா....ட்ட்ட்டாமை... லோகேசன் எங்கேடா? மௌர்யாவா? இக்னைட்டா? இல்லே சமத்துவபுரமா?" என இரைந்தான் கொல்டி

"எதுவும் இல்லை, நம்ம ரூம்தான்"

"நாட்ட்ட்ட்ட்டா...........மை தீர்ப்பை மாத்தி சொல்லு.... " என அனைவரும் இரைந்தார்கள்

"டே, கொல்டி நீ ஆத்தா கூடபோய் சரக்கு வாங்கிட்டு வா பஸ்ட்டு, அதுக்கப்புறம் அதை இங்கே வச்சிட்டு போய் பெப்சி, சோடா எல்லாம் வாங்கிட்டு வாங்க. நைனாவும், விவசாயியும் போய் பழம், மிச்சர், காரசேவு, சிக்கென் அயிட்டம் எல்லாம் வாங்கிட்டு வந்திருங்க, விஜயகாந்தும், மன்சூரலிகானும் போய் சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு வந்திருங்க அப்புறமா போன் பண்றோம் அப்ப கொடுத்து அனுப்புங்க என்று சொல்லிட்டு வந்திருங்க, நானு, போண்டா அழுக்கு எல்லாரும் ரூமை ரெடி பண்றோம், ஹே.... தல, நீ நம்ம டீ கடைக்கு போய், மாஸ்டர் கணபதி கிட்டே நான் கேட்டேன்னு அவர் வச்சிருக்கிற சோகப்பாட்டு, குத்து பாட்டு ரெண்டையும் வாங்கிட்டு, அக்கௌன்ட்லெ சிகரட்டும் வாங்கிட்டு வந்துரு யாராருக்கு என்ன பிராண்டுன்னு உனக்கு தெரியுமில்லே...."

சங்க காலத்திற்கு முன்னிருந்தே இருக்கும் பழக்கங்கள் பல அதில். பேதைகளை கண்டு போதைகளை ஏற்றும் கலையும், பின்னர் போதை ஏற்றி பேதைகளை மறக்க முயற்சி செய்யும் கலையும், அன்றும் இன்றும் என்றும் மாறாதது. அதனாலே இங்கே சுவாரசியத்திற்கும், கேலிக்கும், கிண்டலுக்கும் பஞ்சமிருக்காது.


"... டே....ய் நைனா எது எதுல்லாமோ சொல்லுவியே, நம்மளோட, அழுக்கோட இந்த சிச்சுவேசனுக்கு ஒன்னு சொல்லு பார்போம்?" , என்று தொடங்கினான் குச்சி.

"டேய் குச்சி, உனக்கு எவனையாவது கொடையலன்னா, தூக்கமே வராதே" இது போண்டாவின் நக்கல் வார்த்தைகள்.

"ஏன்டா.... ஆரம்பிக்கிறதுக்கு முன்னேயே நீங்க ஆரம்பிசிட்டீங்கலாடா...???" என்று ஆவேசமான ஆத்தாவை "ஆத்த்த்த்த்தா, அவன் தெரியாம செஞ்சிட்டான், அதுக்காக நீ ஆரம்பிசிராதே ஆத்த்த்தா....ஆஆஆ" என்று சமாதான படுத்தினான் தல

அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டார்கள், 'கொல்டி', 'நாட்டாமை', 'குச்சி' மூவரும் பியரோட காத்திருக்க, மற்றவர்கள் தங்கள் கிளாசை 'விவசாயி' முன்னாடி வைத்தார்கள் 'தண்ணி'பாச்ச. நைனாவை எடு பிடி வேலைக்கும், யாரவது வந்தால் பதில் சொல்வதற்கும், யாருக்காவது போன் வந்தால் பதில் சொல்வதற்கும் இடையில் ஏதேனும் தேவை பட்டால் வாங்கி வருவதற்கும், சைடு டிஷை காலி பண்ணுவதற்கும் வைத்து கொண்டார்கள். கச்சேரி ஆரம்பிச்சு கண ஜோரா மூணு ரவுண்டு போச்சி...

"டேய்.... ங்கொய்யாலே நைனா இப்போ சொல்லுற உன் பாட்டை.... " - குச்சி.

"நான் சொல்லவில்லை 'shake'கிழார் பெருமான் சொன்ன பாட்டு ஒன்னு இருக்கு புடிச்சிக்கோ ...."

இந்தா அந்த பாட்டு:

"பொங்கு பீர் வாழ்க்கை அன் சிறை
தம்பிநாமும் தப்பாது குடிப்பது ஒழியுமோ
பாரிலியது செழீஇய நட்பின் மயலியல்
ஏறி கயிற்று தருவை கூந்தல்லில்
களியவும் உளதோ நீ மடிக்கும் பிகரே"


"என்னடா.... இவன் ஏறுன போதைய இறக்கிருவான் போல இருக்கே......?, இப்ப நீ என்னதான் சொல்ல வரேடா....?" என்று எரிச்சலடைந்தான் தல.

"அவன் இவன் என்று ஏக வசனம் தேவை இல்லை, அவை அடக்கத்துடன் கேட்கா விட்டால் தக்க "பதிலடி" கொடுக்கப்படும்" -விஜயகாந்து.

"மன்சூர் அலிகானிடம் வாங்கின அடிய என்கிட்டே கொடுக்கலாம்னு பாக்குறியா? அது இங்கே நடக்கதுடீ....." என வெறுப்பேற்றினான், தல.

நாட்டாமை களத்திலே வந்து " இங்கே பாரு நைனா, எங்க தமிழ் வாத்தியார், தேவ கசாயம்....., சார்ர்ர்ர்ரிப்பா தேவ சகாயம் மாதிரி அறுக்காம பட்டுன்னு மேட்டரை சொல்லு"

"இதப்பாருரா, சங்க புலவர்கல்லாம் ஒன்னா சேர்ந்திடுசி...", என்று சொல்லி கொண்டே விவசாயி, அழுக்கு, கொல்ட்டி, விஜயகாந்து மன்சூர்அலிகான் எல்லாம் ஒரு சிறு குழுவாகி சவுண்டு விட ஆரம்பித்தார்கள்.

"குடிகாரர்களே..! சாந்தமாக உரையாடுங்கள்" - நாட்டாமை

"சண்டையும், சத்தமும் குடிகாரர்களின் பரம்பரை சொத்து, அதை மாத்த யாராலும் முடியாது." இது நைனா.

"ஏ ... யப்பா ... நைனா, உம் பாட்டுக்கு வெலக்கத்தை சொல்லு" என்று போதையில் வெறித்தான் குச்சி.

"பொங்கி வரும் பீர் போன்றது வாழ்கை. அன்பு சிறையில் கட்டுப்பட்டுள்ள தம்பீ... நாமும் வாரம் தவறாது குடிப்பது ஒழியுமோ? பாரில் உண்டான நட்பு, அதாவது பார் என்று நாம சரக்கடிக்கிற பாரையும் சொல்லலாம், எல்லாருக்கும் வாழ இடம் கொடுத்திருக்கிற இந்த உலகத்தையும் சொல்லலாம். பாரில் உண்டான நட்பு, பிரியம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டது, நீ கயிறு கட்டி சொந்தம் ஆக்கி கொள்ள விழையும் பெண்ணின் கூந்தலில் உள்ள மணத்திலும் விஞ்சி விடுமோ? நட்பின் மணத்தினால் நாம் கொண்ட நட்பு"

"இதன் மூலம், நைனா... நீ அழுக்குக்கு கூறும் கருத்து?" - குச்சி.

"கவலை படாத சகோதரா, உன் பிகர் கைவிட்டாலும், கைவிடாது நாங்கள் நண்பர்கள் இருப்போம்" என்று சொல்கிறார்.

"எய்யா நைனா, சாமி.... போதும்டா ..உன்னோட ... வெளக்கம்..." என்று எல்லாரும் கோரசாக சொல்லி தீர்த்தமாடி மட்டையானார்கள்.

'shake'கிழார் பெருமான் தந்த அருமையான பாடலை அசை போட்டபடி, நைனாவும் தூங்கிப்போனான், வாழ்க 'shake'கிழார் என்று முனு முனுத்தவாறே......

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அறிவிப்பு : இது யாரையும் புண் படுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட பதிவல்ல. நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.

5 comments:

கிருஷ்ணா said...

சேக்கிழார் பெருமானை அவமதிப்பது போல் இருக்கிறதையா உங்கள் எழுத்து! முஸ்லிம்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது!தங்கள் மதத்தையும்.. அவர்கள் முன் தோன்றல்களையும் எப்போதும் குறைத்து கூற மாட்டார்கள்.. அப்படி யாராவது கூறினால்.. என்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?!

நையாண்டி நைனா said...

வருகை தந்த, திரு.கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி.

இது யாரையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட பதிவல்ல. நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.

நாமக்கல் சிபி said...

//இது யாரையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட பதிவல்ல. நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.//

அதானெ!

:))

நையாண்டி நைனா said...

வாங்க நாமக்கல் சிபி அவர்களே...
என்னா? ரொம்ப நாளா ஆளையே காணும்.

பெசொவி said...

காமெடிய காமெடியா பார்க்கணும், அந்த வகையில இது நல்லா இருக்கு.