Wednesday, 8 September 2010

பொன்னியின் செல்வனா? ஜாவாவின் ஜாரியா?

சென்று வந்தேன், இது வரை காணா பொன்னுலகம். நம் மூதாதையர் உயிருடன் அலைந்து திரிந்த அந்த பூமி. உலகலாம் உள்ள மொழிகளுள் மூத்த தமிழ் கொடுத்த முத்தமிழும், முக்கனி சாரிலும் இல்லா அந்த தீஞ்சுவையை கண்டேன். அமரர் கல்கி அவர்கள்.. வடித்திட்ட பொன்னியின் செல்வன் என்னும் நாவலின் மூலம்.

எப்படி சொல்வது... வார்த்தைகளின் வார்ப்பும், அதை அடுக்கிய வனப்பும்.... அந்த அனுபவத்தை, அந்த சுகத்தை, அந்த  சஞ்சாரத்தை.அந்த மலர்ச்சியை, அந்த கிளர்ச்சியை, அந்த உவகையை, அந்த ஆனந்தத்தை, அந்த வசந்தத்தை அந்த நாவலை படிக்கும் பொழுது நான் அடைந்த அந்த பரவசத்தை ஆகா....ஆகா....ஆகா.... நினைக்க..... நினைக்க....

கதை அரசவையிலே நடக்கும் போது நானும் ஒரு மந்திரி பிரதானியாய்,  கடலில் மரக்கலத்தில் நடக்கும் பொழுது நானும் ஒரு மாலுமியாய், சுழன்றடிக்கும் சூறாவளியில் என் முகத்திலும் கடல் நீர் தெரித்ததை அடர் கானகத்தில் நடந்த பொழுது எனக்குள் ஒலித்த சிம்ம கர்ஜனையையும், புலியின் உறுமலையும், களிறின் பிளிறலையும் அது கேட்டு என்னுடல் நடுங்கியதையும்.... சதி திட்டம் நடக்கையிலே நானும் என்னை சுற்றி பார்த்து கொண்டதையும்... அந்தி நேர தென்றலில் நடந்த காதல் விளையாட்டை படிக்கையிலே என்னுள் எழுந்த கிளர்ச்சியையும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், போனால் அதுவே பெரிய கதையாகி விடும்... அதனால் அந்த நாவலை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லாமல் விட்டு விடலாம் என்றால் அதுவும் முடிய வில்லை.. அதனால் அந்த நாவல் படிக்கும் பொழுது ஏற்பட்ட சில அனுபவங்களை சொல்ல வேண்டும்.

பச்சை வண்ணத்தில் இருப்பது உண்மை ஒலிகள்...
 
செவ்வண்ணத்தில் இருப்பது, செவ்வையாக கதை படித்ததினால் என் காதில் ஒலித்த மாய ஒலிகள்

“நைனா, உன்ன P.M (புராஜக்ட் மானேஜர் ) கூப்பிடுறார்"
"என்ன? சுந்தர சோழ சகரவர்த்தியிடமிருந்து அழைப்பா...! வருகிறேன் என்று சொல்."

"டேய் நைனா, இன்னிக்கு குவாலிட்டி டீம் மீட்டிங் தெரியுமா..."
"அந்த பழுவேட்டரையர்களுக்கு, நமக்கு எதிராக சதி செய்வதே பொழப்பா போய்டுச்சு..."

"(peer review)பீர் ரிவீயுவ்-லே உன் கோடை பிரிச்சி மேஞ்சிட்டானாமே, ரோஹித் சோளங்கி."
"சதிகாரன்...! கூடவே இருந்து குழி பறித்து.. விட்டானா அந்த வேங்கி நாட்டான். சிநேக துரோகம் செய்வதில் அவனுக்கு நிகர் அவன்தான்
(எப்பா யாரும் சினேகா துரோகம் என்று படித்து தொலஞ்சிராதீங்க )

"இருந்தாலும் நம்ம டீம் லீடு உன்னை விட்டு கொடுக்கமே பேசினாராமே..."
"இளவல் ஜாவா மொழிதேவிக்கு, என் மீது எல்லையற்ற பாசம் உண்டு என்பதை நிரூபித்து விட்டார், வாழ்க இளவரசர், வாழ்க ஜாவாவின் ஜாரி... "

"நாம எழுதுன கோடை பிரிச்சி மேயுறது அந்த டெஸ்ட் டீம்லே இருக்குற பிரத்யுஷா தான்....... தெரியுமா உனக்கு ?"
"அந்த ஜீன்ஸ் ஜக்கம்மா நம்ம பழுவேட்டரையர்களுடன் சேர்ந்த நாள் முதலா அதை தானே செய்து கொண்டுள்ளாள்... சதிகாரி... காணாததிற்கு அவள் கண்டு பிடிக்கும் பக்(bug) அத்தனைக்கும் p1(priority) போட்டு மன்னரிடம் மாட்டி விடுவதே அவர்களின் திட்டமாயும் இருக்கிறதே..."


7 comments:

♠ ராஜு ♠ said...

இதுக்குத்தான் அவுட் ஆஃப் சிலபஸெல்லாம் படிக்கப்புடாதுன்றது..!
நீங்களும் இலக்கியவாதி மாதிரியே பொலம்ப ஆரம்பிச்சீட்டீயளேண்ணேய்ய்.

நீச்சல்காரன் said...

எப்படியோ இலக்கிய வாதியாகிட்டேங்க! திண்ணை காலியாயிருச்சு

karthik said...

அண்ணே! பட்டய கெளப்புறீங்க அண்ணே! உங்களோட விசிறி ஆயிடேன்னா பாத்துகோங்களேன். என்னையும் உங்க ஜோதியில ஐக்கியமாக்கிகோங்கன்னா!
http://www.tamilkarthik.blogspot.com/

"உழவன்" "Uzhavan" said...

பச்சையும் சிவப்புமாய் பட்டையைக் கிளப்புகிறீர்கள் நைனா :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

சரக்கு பத்தலையோ.. பொலம்பல் ரொம்பக் கம்மியாயிருக்கே தல..:-)))

நையாண்டி நைனா said...

/*இதுக்குத்தான் அவுட் ஆஃப் சிலபஸெல்லாம் படிக்கப்புடாதுன்றது..!
நீங்களும் இலக்கியவாதி மாதிரியே பொலம்ப ஆரம்பிச்சீட்டீயளேண்ணேய்ய்*/

thanksண்ணேய்

நையாண்டி நைனா said...

/*நீச்சல்காரன் said...
எப்படியோ இலக்கிய வாதியாகிட்டேங்க! திண்ணை காலியாயிருச்சு*/

No I am always a மொக்கராசு